செவ்வாய், 14 மே, 2019

திருமந்திரம் உயிர்நிலையாமை


187 to #191


#187. தொழ அறியாதவர்
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பு இன்றி எம் பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற போது அறியார் அவர் தாமே.

பூங்கொம்பில் தழைக்கும் செந்தளிர்கள், மற்றும் அழகிய மலர்கள் போன்றவை. இவை அனைத்துமே சருகுகளாக மாறி விடும். இதைக் கண்ட பிறகும் கூட உயிர் உள்ளபோதே மக்கள் இறைவன் திருவடிகளைத் தொழுவதில்லை. எங்கனம் வணங்குவர்யமனிடமிருந்து அழைப்பு வந்த பிறகு?
#188. உடலை ஓம்ப வேண்டும்
ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது,
ஐவருமச் செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகனோலை வருதலால்
ஐவருமச் செய்யைக் காவல்விட்டாரே.

பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்ற ஐவர் தத்தம் தொழில்களைச் செய்வதற்கு அவர்களுக்கு விளை நிலமாக ஓர் உடல் கிடைத்தது. அந்த ஐவரும் அந்த உடலை நன்கு ஓம்புவார்கள் அதன் வினைப் பயன்களை அதற்கு ஊட்டி விடுவார்கள். இவர்களின் தலைவனாகிய சிவபெருமான் அந்த உடலின் வினை நுகர்வு முடிந்தவுடன் இறுதிச் சீட்டு அனுப்புவான்.அதன் பிறகு இந்த ஐவரும் அந்த உடலை ஓம்ப மாட்டார்கள்.
#189. கோவில் மண்ணாகி விடும்
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுஉள
அதுள்ளே வாழும் அரசனும் அங்கு உளன்
அதுள்ளே வாழும் அரசம் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

மாயை என்ற மண்ணால் உருவாகிய உடல் ஒன்று உண்டு. அதில் உயிர்ப்பை நிறுத்தவும் விடுக்கவும் இரண்டு இடங்கள் உள்ளன. அந்த உடலில் பற்றுக் கொண்டு வாழும் ஜீவன் ஆகிய அரசன் அங்கு உள்ளான். ஆனால் அந்த அரசன் அந்த உடலை விட்டு நீங்கிய உடனேயே கோவில் போன்ற அந்த உடல் மீண்டும் மண்ணாக மாறி விடும்.
#190. வேதாந்தக் கூத்தன்
வேங்கடநாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தியை
வேங்கடம் என்றே விரகு அறியாதவர்
தாங்கவல்லார் உயிர் தாம் அறியாரே.

சிரசின் மேல் ஈசான திசையில் விளங்குபவன் சிவன். வேதம் கூறும் வாக்கின் வடிவான பிரமமும் சிவன். வெந்து அழியும் இடலில் தீயாக இருப்பவனும் சிவன். தம் உடம்பாக சிவன் இருக்கும் உண்மையை அறியாதவர் உடலைத் தாங்கும் உயிரைப் பற்றியும் அறியாதவர் ஆவர்.
#191. அகங்காரத்தை வென்றவர்
சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன்
அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர்
நின்று உணரார் இந்நிலத்தில் மனிதர்கள்
பொன்று உணர்வாரின் புணர்க்கின்ற மாயமே.

சிவன் என்னும் சூரியன் பத்து திசைகளிலும் சென்று அங்குள்ள அனைத்தையும் உணர்வான். சிவன் உணர்வு மயமாக விளங்குவான். உடலில் பரவியும் விரவியும் அனைத்தையும் உணர்கின்றான். இந்த உண்மையை உலகத்தவர் சற்றும் அறிவதில்லை. ‘நான்’ என்னும் அஹங்காரத்தை வென்று விட்ட ஞானியரிடம் சிவன் கலந்து விளங்கும் உண்மையையும் அவர்கள் அறியமாட்டார்கள்.



192 to # 196


#192. அழிந்துவிடும் தன்மை
மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிது உணர்ந்தவார் இல்லை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே.

நன்கு நெய்து தயாரிக்கப் பட்ட பட்டாடையும் கிழிந்து போய்விடும். இந்த உண்மையைப்பற்றி உலகத்தவர் சிறிதும் சிந்திப்பதில்லை. அழகிய கருங் கூந்தல் வெண் கூந்தலாக மாறிவிடுவதும் கண்கூடு. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு சிறு பொழுதே உள்ளது. இந்த உண்மைகளைச் சிந்தித்து நன்கு உணர்வீர் உலகத்தோரே.
#193. வீணாள் ஆக்காதீர்கள்
துடுப்புஇடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்புஇடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி
அடுத்துஎரி யாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே.

சுழுமுனை என்னும் அகப்பை உள்ளது நம் உடலில். உடலாகிய பானைக்கு தகுந்த அரிசி ஆகும் விந்து. சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றும் சேர்ந்த அடுப்புக்குத் தகுந்த விறகுகள். உடலின் பஞ்சப் பிராணன்கள். இவற்றை வீணாக்காதீர்கள். விந்து சக்தியைத் தந்து விட்டு அமுதத்தைப் பெறுங்கள். நாட்களை வீணாக்காதீர்கள்!
துடுப்பு = அகப்பை => சுழுமுனை
பானை = > உடல்
அரிசி => விந்து
அடுப்பு => நாபி ஸ்த்தானம்
மூன்று => சூரியன் , சந்திரன், அக்னி
கொள்ளி => ஞானம் என்னும் தீ
அஞ்சு => பஞ்சப் பிராணன்கள்.

#194. புறம் நின்ற கருத்து
இன்புஉறு வண்டு அங்கு இனமலர் மேல்போய்
உண்பது வாசம் அதுபோல் உயிர்நிலை
இன்புஉற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி
கண் புறம் நின்ற கருத்துள் நில்லானே.

இன்பத்தைத் தேடும் வண்டுகளின் கூட்டம். பூக்களில் உள்ள சுவை மிக்க தேனை உண்ணும். அது போன்ற உயிர்களும் இன்பத்தையே நாடும். சோம சூர்யாக்னிகளின் ஒளியில் விளங்கும் நம் ஈசன் புறப் பொருட்களை நாடும் மனத்துள் விளங்க மாட்டான்.
#195. விதிகள் ஒன்றும் இல்லை
ஆம்விதி நாடி அறம் செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதுஎன் சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமை வல்லார்க்கே.

இந்தப் பிறவியில் அறவழியில் நில்லுங்கள். இன்பம் தரும் நெறியில் ஒழுக்கத்துடன் இருங்கள். ஒளி மண்டலத்தில் விளங்கும் இறைவனைப் போற்றுங்கள். மனிதப் பிறவியை பெற்ற நற்பேறு உடையவர்களுக்குக் கூறுவதற்கு என்று வேறு என்ன விதிகள் உள்ளன?
#196. பகிர்ந்து உண்ணுங்கள்
அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும்போது
தவ்விக் கொடு உண்ம்மின் தலைப்பட போதே.

வஞ்சனை, பொய், துன்பம் தரும் தீய சொற்களைப் பேசாதீர். அறநெறி கெடுமாறு தீய செயல்களைச் செய்யாதீர். பேராசை கொண்டு பிறர் பொருட்களைக் கவராதீர். சிறந்தவர்களாக நற்பண்புகளுடன் விளங்குங்கள். உண்ணும் பொழுது எவரேனும் வந்தால் அவர்களுக்கு ஓர் அகப்பை உணவு கொடுத்துவிட்டுப் பிறகு உண்ணுங்கள்.
(உயிர் நிலையாமை முற்றியது, அடுத்து வருவது கொல்லாமை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமந்திரம் உயிர்நிலையாமை

187 to #191 #187. தொழ அறியாதவர் தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில் இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பு இன்றி எம் பெர...